நல்ல மாற்றம்
புனித ரமளான் நிறைவடைந்து நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டது. அது பிரிந்து சென்றாலும் கவனிக்கத்தக்க சில பாடங்களை - அனுபவங்களை நமக்கு பதிந்து சென்றிருக்கிறது. ரமளானில் நாள்தோறும் முக்கிய அறிவுரைகளை தமிழகத்தின் முக்கிய நாளிதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. அதில் அவை ஸஹர் நேரம் இஃப்தார் நேரங்களைக்கூட பதிப்பித்தன.
இஸ்லாத்தின் உயர்வான கருத்துகளை பல இலட்சம் மக்கள் படிக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மாற்றம் என்னவென்றால் இஸ்லாத்தின் மீது - முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்டு வந்த தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மக்களும் அரசியல் தலைவர்களும் மனமாற்றம் பெற்றிருக்கின்றார்கள்.பட்டிமன்றப் பேச்சாளர்கள்கூட குர்ஆனின் வசனங்களை, பெருமானாரின் பொன் மொழிகளை எடுத்தாளத் தொடங்கியுள்ளார்கள்.
குடியரசுத்தலைவர் - பிரதமர் - மற்ற முக்கியத் தலைவர்களின் ஈது வாழ்த்துச் செய்திகளில் அவை பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. இஸ்லாத்தின் உண்மை முகம். அமைதி - சகோதரத்துவம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளார்கள். நாடெங்கும் நடக்கும் இஃப்தார் விருந்துகள். சமய நல்லிணக்க விருந்தாக - சமபந்திபோஜன விருந்தாக மாறிவருவது மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய மக்கள் ஏங்கிக் கிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், இனம் நிறம் மொழிகளால் பிரிந்துபோகாத உறவு, ஆகியவற்றை இஸ்லாம் சர்வ சாதாரணமாக வழங்கியிருப்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது - கைநீட்டி வரவேற்கிறது. இஸ்லாத்தின் சிறிய அறிமுகமே மக்களை இந்த அளவிற்கு மாற்ற முடியுமானால் அதனை முழுமையாகத் தெரியச் செய்யும் போது இந்தியாவே -உலகமே- அமைதிப் பூங்காவாக மாறிவிடாதா?