முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு !
மூலம் : திருநபிசரித்திரம் . தொகுப்பு : முஹம்மதடிமை , திருச்சி
கைபர்ச் சண்டை ஹிஜ்ரி 7- வது வருடம்
கைபர் என்னும் பதத்திற்குக் கோட்டை என்பது பொருள் . அது மதீனாவிலிருந்து 8 மன்ஜில் அதாவது 200 மைல் தூரத்திலுள்ள ஒரு நாட்டின்பெயர் . அது மிகவும் செழிப்பான பிரதேசம் . அதனாலேயே யூதர்கள் அங்குச் சென்று பலமான கோட்டைகளைக் கட்டிவாழ்ந்து வந்தார்கள் . பனூநுலைர் என்னும் யூதக் கூட்டத்தார் மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர்கள் அங்குதான் குடியேறினார்கள். அது முதல் கைபர் யூதர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாயிருந்தது. கைபரானது இஸ்லாத்திற்குக் கடுமையான விரோதத்தையும், ஆபத்தையும் கொண்ட இடமாயிருந்தது . அகழ்ச்சண்டையையும் தூண்டியது அங்கிருந்த யூதர்கள் தாம் .
கைபரிலுள்ள யூதர்களுக்கு ஹுயை இப்னு அக்தப் என்பவர் தலைவராயிருந்தார். குறைலாச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார் . அவருக்குப் பின் அபூராபி அஸலாம் இப்னு அபீஹகீக் என்பவர் தலைமை வகித்து வந்தார் . அவர் பெரிய வியாபாரி . அதிக செல்வாக்குள்ளவர் . அரபி தேசத்தில் மிகுந்த செல்வாக்குள்ள கத்பான் குடும்பத்திற்கும் கைபர் யூதர்களுக்கும் நெருங்கிய சம்மந்தமிருந்தது. இவ்விரு கூட்டத்தினரும் சிநேக உடன்படிக்கையும் செய்திருந்தார்கள் . ஹிஜ்ரி 6 ஆவது வருடம் அபூராபிஅ என்பவர் , கத்பான் கூட்டத்தாரிடம் சென்று அவர்களைச் சேர்ந்துள்ள மற்றக் கூட்டத்தார்களையும் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சண்டை செய்யும்படி தூண்டினார். யூதர்களும் , கத்பான் கூட்டத்தாரும் சேர்ந்து யுத்தத்திற்கு ஆயத்தம் செய்தார்கள் . மதீனாவைத் தாக்குவதற்குப் பெரிய சேனை திரண்டு விட்டது . ஆனால் ஹிஜ்ரி 6 ஆவதுவருடம் ரமலான் மாதத்தில் யூதர்களின் தலைவரான அபூராபிஅ என்பவர் , அவருடைய கைபர்க் கோட்டையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அன்சாரி ஒருவர் அங்குச் சென்று அவரைக் கொன்று விட்டார். அவருக்குப் பின் அஸீர் இப்னு ஸர்ராம் என்பவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார் . அவரும் யூதர்களையும் , கத்பான் கூட்டத்தார்களையும் ஒன்று சேர்த்து மதீனாவைத் தாக்குவதற்காகப் பெரிய சேனையைத் திரட்டினார்.
இவ்விஷயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குத் தெரிந்ததும் அஸீரை அழைத்து வரும்படி 30 பேர்களை அனுப்பியிருந்தார்கள் . அவர்கள் போய் அஸீரைக் கூட்டிக் கொண்டு வரும் போது , கர்கரா என்னும் இடத்திற்கு வந்ததும் அஸீரின் மனதில் ஏதோ சந்தேக முண்டாகிமுஸ்லிம்களில் ஒருவருடைய வாளைப் பிடுங்க எத்தனித்தார் . ஆனால் , அம்முஸ்லிம் , தம் குதிரையை வேகமாய் விட ஆரம்பிக்கவும் அஸீர் அவரைப் பின் தொடர்ந்து வெட்ட முயன்றார் . ஆனால் அந்த முஸ்லிம் தன் வாளினால்அஸீரை வெட்ட அவர் கீழே விழுந்தார் . அதிலிருந்து முஸ்லிம்களுக்கும் அஸீருடன் வந்த 30 யூதர்களுக்கும் சண்டை நடந்தது . யூதர்களில் ஒருவர் மட்டும் தப்பினார் . இது ஹிஜ்ரி 6 ஆவதுவருட முடிவில் , 7ம் வருட ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி .
கைபரிலுள்ள யூதர்களே முன்னால் மக்காவிற்குச் சென்று குறைஷிகளைத் தூண்டிஅவர்கள் மூலமாய் அரபிகள் எல்லோரையும் முஸ்லிம்களுக்கு விரோதமாகக் கிளப்பிவிட்டார்கள் . இச்சமயமும் அவர்கள் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சண்டை செய்யும்படி கத்பான் கூட்டத்தாரையும் தூண்டிக் கொண்டே யிருந்தார்கள் . அச்சமயம் மதீனாவிலுள்ள முனாபிக்கீன்களும் , முஸ்லிம்களுடைய நிலைமையைக் குறைவாக மதிப்பிட்டு யூதர்களுக்கு ஊக்கம் காட்டிவந்தார்கள் .
நபி பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் , யூதர்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பி அப்துல்லா இப்னு ரவாஹா ( ரலி ) என்பவர்களை அவர்களிடம் அனுப்பினார்கள் . ஆனால் யூதர்களோ இயற்கையில் கல் நெஞ்சும் , சந்தேக புத்தியும் கொண்டவர்கள் . அத்துடன் முனாபிகீன்களும் மறைமுகமாக அவர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள் . முனாபிகீன் தலைவனான அப்துல்லா இப்னு உபை என்பவன் , கைபர் யூதர்களுக்கு ஒரு தபால் அனுப்பியதில் , முஸ்லிம்கள் கைபரைத் தாக்க ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் , அவர்கள் சொற்பமானவர்களாயும் , போதிய ஆயுதம் இல்லாதவர்களாயும் இருக்கிறார்களென்று குறிப்பிட்டிருந்தான் . இவ்விஷயம் தெரிந்ததும் , யூதர்கள் உடன்படிக்கை செய்து கொள்ள மறுத்து விட்டார்கள் .
கைபர் யூதர்கள் கத்பான் கூட்டத்தாரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு மதீனாவைத் தாக்கப் புறப்பட்டார்கள் . தீகர்த் என்னும் மேய்ப்பு ஸ்தலத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருக்கும் போது அக்கூட்டத்தாரில் சிலர் போய் 20 ஒட்டகங்கள் வரை கைப்பற்றிக் கொண்டு அவைகளை மேய்த்துக் கொண்டிருந்த ஹள்ரத் அபூதர் ( ரலி ) அவர்களின் குமாரரையும் கொன்று விட்டார்கள் . கொன்று விட்டுஅவர்களுடைய மனைவியையும் சிறையாக்கிக் கொண்டார்கள் . அவ்விஷயம் முஸ்லிம்களில் அம்பெய்வதில் நிபுணரான ஸலமா என்பவருக்குத் தெரிந்து , அவர் கத்பான் கூட்டத்தாரைப் பின்தொடர்ந்து சென்றார் . அவர்கள் சமீபமாயிருந்த குகையில் போய் ஒளிந்து கொண்டார்கள் . ஸலமா அக்குகையின் சமீபமாகச் சென்று அவர்களின் மீது அம்பெய்ய அக்கூட்டத்தார் , ஒட்டகங்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் . அந்தஸஹாபி பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , விரோதிகளை விட்டு வந்திருப்பதாகவும் நூறு பேரைத் தம்மோடு அனுப்புவதாய் இருந்தால் அவர்கள் எல்லோரையும் பிடித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னார் . அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் , அவரை நோக்கி , எதிரிகள் உமது கைவசப் பட்டால் இரக்கத்துடன் நடந்து கொள்ளும் என்று உத்திரவிட்டார்கள் . இச்சம்பவம் நடந்து மூன்று தினங்களுக்குப் பின் கைபர்ச் சண்டை ஆரம்பமாகிவிட்டது .
யூதர்களும் , கத்பான் கூட்டத்தாரும் மதீனாவைத் தாக்க ஆயத்தமாய் விட்டார்களென்ற உறுதியான செய்தி பெருமானாருக்கு கிடைத்தது . அதற்கு அறிகுறியாக கத்பான் கூட்டத்தார் மேய்ப்பு நிலத்தில் ஒட்டகங்களைக்கொள்ளையடித்ததாலும் அவர்களை அடக்குவதற்காக பெருமானார்அவர்கள் கைபரைத் தாக்கஎண்ணங்கொண்டார்கள் . கைபர் சண்டை இதற்கு முன் நடந்த மற்ற சண்டைகளிலிருந்தும் ஒருகுறிப்பிட்ட வித்தியாசத்தைக்கொண்டது. படையெடுப்பதற்கு முன்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்காணும் விளம்பரத்தை பகிரங்கப்படுத்தினார்கள் . அல்லாஹ்வுக்காக சண்டை செய்யப் பிரியமானவர்கள் மட்டும் நம்முடன் சேர்ந்துவாருங்கள் !
அப்பிரகடனம் ஏற்படுத்திய ஒரு பிரபந்தத்தை ...... இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ....