வழிகாட்டி!
செம்மல் நபிகளார் சிறந்த தந்தை!
மிஃராஜ் சாதிக் - திருச்சி
.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் நான்காவது பெண் குழந்தையாக பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் நபிக்கு நபிப்பட்டம் கிடைத்த ஓராண்டுக்குப் பின் பிறந்தார்கள்.
பாத்திமா என்றால் நரக நெருப்பை விட்டு பாதுகாக்கப்பட்டவர் அல்லது தடுக்கப்பட்டவர் என்று பொருள்.
பாத்திமா (ரலி) அவர்களுக்குத் திருமணத்தின் போது வயது பதினைந்து.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணம் சென்றால் எல்லோருக்கும் கடைசியாக இவர்களிடம் இருந்துதன் விடைபெற்றுச் செல்வார்கள்.
பிரயாணம் முடிந்து வந்ததும் முதலில் இவர்களைத்தாம் சந்திப்பார்கள்.
மகளுக்கு கஷ்டம் கொடுப்பதை வெறுத்தல்:
ஒருமுறை அலீ (ரலி) அன்ஹு அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை இரண்டாந் தாரமாக திருமணம் செய்யப் போவதாகக் கூறினார்கள். இதைக் கேட்ட பாத்திமா (ரலி) அவர்கள் கவலை கொண்டு நபியவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள் “பாத்திமா எனது உடலின் ஒரு பகுதி ஆவார்கள். அவருக்கு வேதனை தருபவர் எனக்கு வேதனை தந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். இவ்வாறு தம் மகளுக்கு வேதனை கொடுப்பதை மறுத்தார்கள்.
மகளின் வறுமையைப் போக்குதல்:
ஒருமுறை அலீ (ரலி) அவர்களுக்கு வறுமை ஏற்பட்டது. அதனைக் கண்டு துன்பம் அடைந்தார். அலீ (ரலி) அவர்களிடம் பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் சென்று என்ன செய்வது என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அன்ஹா அவர்களிடம் நபியிடம் சென்று ஏதேனும் பொருள் வாங்கி வந்தால் நல்லது என்று கூறினார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் நபியின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அப்போது வீட்டில் நபியுடன் உம்மு அய்மன் உடன் இருந்தார்கள். நபியவர்கள் பாத்திமா கதவைத் தட்டுவது போல் தெரிகிறது என்று உம்மு அய்மனிடம் கூறினார்கள். இதற்கு முன் இந்த நேரத்தில் வந்ததில்லை, ஆனால் இப்போது வந்துள்ளார் என்று கூறினார்கள். அதற்குள் பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டார்கள். அவர்கள் வந்ததும் நபியிடம் மலக்குகளின் உணவு...
லாஇலாஹ இல்லல்லாஹு ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி என்று கூறுவதாக செய்தி வந்தது.
ஆனால் நம்முடைய உணவு என்ன என்று கேட்டார்கள். அதற்கு உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு சத்திய மார்க்கத்தைக் கொடுத்து அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மதுடைய குடும்பத்தாரில் எந்தவொரு வீட்டிலும் முப்பது நாட்கள் அடுப்பே எரியவில்லை. என்னிடம் சில ஆடுகள் வந்துள்ளன. நீ விரும்பினால் உனக்கு ஐந்து ஆடுகள் தருகிறேன். அல்லது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த ஐந்து வாசகங்களை உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று கூறினார்கள். அதற்கு பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த ஐந்து வாசகங்களைக் கற்றுத் தாருங்கள் என்று கூறினார்கள். அவ்வாசகங்கள்,.....
யாஅவ்வலல் அவ்வலீன். வயா ஆஹிரல் ஆஹிரீன். வயா தல் குவ்வத்தில் மதீன். வயா ராஹிமல் மஸாகீன். வயா அர்ஹமர்ராஹிமீன்.
இந்த ஐந்து வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். அலிய் (ரலி) அவர்கள் அங்கு நடந்தது என்னவென்று கேட்டார்கள். பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் நான் உலக வஸ்துக்களைப் பெற்று வரச் சென்றேன். ஆனால் ஆகிரத்தைப் பெற்று வந்துள்ளேன் என்று கூறினார்கள். அதற்கு அலிய் (ரலி) அவர்கள் உன் வாழ்நாளில் எல்லா நாட்களையும் விட இந்நாள் மிகவும் சிறந்தது என்று கூறி மகிழ்ந்தார்கள்.
நபியவர்கள் நினைத்திருந்தால் தன் மகளின் வறுமைக்கு ஆடுதான் கொடுத்திருக்க வேண்டும்.. ஆனால் இம்மைக்கும், மறுமைக்கும் அழியாத வாசகங்களை கற்றுக் கொடுத்தார்கள். யாராக இருந்தாலும் தன் வறுமைக்குத் தேவையாக அந்த ஆடுகளைப் பெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் பாத்திமா (ரலி) அன்ஹா அவர்கள் உயர்ந்த நோக்குடன் வாசகங்களைக் கற்றுக் கொண்டார்கள். உத்தம நபி அவர்கள் உயர்ந்த நோக்குடன் ஒரு தந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டி சிறப்பாக புதுமை படைத்துள்ளார்கள்.