• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

இன்பம் எங்கு இருக்கிறது?

பாகவி பின் நூரி


இன்பம் வெளிப் பொருள்களில் இருக்கிறது. அவற்றை அடைந்தால் இன்பம் கிட்டும் என்று நினைக்கிறோம். உண்மையில் ஒரு பொருளில் இன்பம் இருக்கிறது என்றால், அது என்றும், எந்த இடத்திலும், யாருக்கும் இன்பம் அளிக்க வேண்டும்.  எப்படி நெருப்பு, என்றும் எந்த இடத்திலும் யாருக்கும் சுடுகிறதோ, அதே மாதிரி! ஆனால் அப்படிப்பட்ட பொருள் ஏதேனும் ஒன்று இருக்கிறதா?

இன்று நாம் இன்பம் என்று நினைக்கும் மனைவியோ, மகனோ, நாளையே துன்பமாக மாறிவிடுகின்றார்கள். உண்மையில் யார் மீதாவது நிஜ அன்பு இருக்கிறதா? என்று எண்ணிப் பாருங்கள். நம் இன்பத்துக்காகத்தான் நாம் நம் மனைவியை நேசிக்கின்றோம். நம் இன்பத்துக்காகத்தான் நாம் நம் மகனை நேசிக்கின்றோம். 

நமக்கு அவர்கள் அனுகூலமாக இருக்கும் வரையில் நாம் அவர்களை நேசிக்கிறோம். அப்படி இல்லாவிட்டால் வெறுக்கின்றோம். ஆகவே இன்பம் வெளிப் பொருள்களில் இல்லை என்பது தெளிவாகிறது.

ஓர் அரசன் தனக்கு வேண்டிய சில பொருள்களை மட்டும், ஒரு சிறு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் தானம் செய்தான்.  பிறகு ஒரு ஞானியைப் பார்த்து இன்பம் எங்கே இருக்கிறது என்று கேட்டான்.  உடனே, அந்த ஞானி, அவனின் மூட்டையைப் பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.  அரசன் அவரைப் பின் தொடர்ந்து ஓடி மூட்டையை அவரிடமிருந்து பிடுங்கினான்.  உடனே ஞானியார், இன்பம் எங்கிருக்கிறது என்று இப்பொழுது தெரிந்து கொண்டாயா? உன் மூட்டை கிடைத்ததும் அது (மனது) நிம்மதியாகி விட்டது. ஆக இன்பம் நிம்மதியான மனதில் இருக்கிறது என்றார்.

ஒரு காரணத்தினால் நமக்கு இன்பம் கிட்டுமானால், அது மெய் இன்பம் அல்ல.  ஒருவர் பெரிய போலீஸ் அதிகாரியாக இருப்பதால், இன்பமாக இருக்கலாம்.  ஆனால், அவர் ஓய்வு பெற்றதும் அந்த இன்பம் போய்விடுகிறது. முன்பு சல்யூட் அடித்த போலீஸ்காரர் இப்போது சல்யூட் அடிக்க மாட்டார். சிந்தித்துப் பார்த்தால், இன்பம் மனதிலும் இல்லை என்பது புலனாகும். நாம்தான் இன்ப சொரூபமாக விளங்க வேண்டும். மனம் சலனமற்று இருக்கும் பொழுது அந்த இன்பம் வெளிப்படுகிறது. அந்த இன்ப சொரூபத்தை (இறை இன்பத்தை) எப்படி அடைவது என்பதைத்தான் அறநூல்கள் சொல்லிக் காட்டுகின்றன. அதை ஞானிகள், மகான்கள் குருமார்கள் அனுபவித்து விளக்கிக் காட்டுகிறார்கள். 

(தழுவல் கட்டுரை தினமணி 04.07.1989)