முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின்
வாழ்க்கை வரலாறு!
மூலம்: திருநபி சரித்திரம். தொகுப்பு: முஹம்மதடிமை, திருச்சி.
விஷமா? விஷயமா? விடயமா?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை ஒப்புக் கொண்டு சென்றார்கள். மாமிச ஆகாரத்தில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. ஒருபிடி ஆகாரம் சாப்பிட்டதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையை உயர்த்திக் கொண்டு, விஷம் கலக்கப்பட்டிருக்கிறது என்று உயர்ந்த சப்தத்துடன் சொன்னார்கள். ஆனால் அவர்களுடன் விருந்துண்ணச் சென்றிருந்த பஷர் என்பவர் அந்த உணவை அருந்தி விட்டார். மற்றவர்கள் அந்த உணவை உட்கொள்ளவில்லை.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்தளித்த அப்பெண்ணை அழைத்துக் கேட்க, அவள், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டாள். மற்ற யூதர்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், தங்களைச் சோதிப்பதற்காகத்தான் விஷத்தைக் கலந்தோம். உண்மையில் நீங்கள் நபியாய் இருந்தால் விஷத்தினால் கெடுதி ஒன்றும் ஏற்படாதிருக்கும். நபியாயில்லாதிருந்தால் அதனால் தங்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுதலை பெறுவோம். அதற்காகத்தான் இவ்விதம் செய்தோம் என்று சொன்னார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுக்குச் செய்த தீங்கை நினைத்துப் பழி வாங்க எண்ணங் கொள்ளவில்லை. அந்தப் பெண்ணை மன்னித்து அனுப்பி விட்டார்கள். ஆனால் விஷத்தினால் பஷர் என்பவர் இரண்டு, மூன்று நாட்களில் உயிர் துறந்தார். அக்கொலைக்குப் பழி வாங்குவதற்காக அப்பெண்ணையும் வெட்டிவிடும்படி உத்தரவிட்டார்கள்.
கைபர் பகுதியிலிருந்து வரும் வருமானத்தில் பாதியை அந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எல்லா வீரர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. மறுபாதியில் ஐந்தில் ஒரு பாகம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உத்தரவுப்படி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதிலிருந்து அவர்கள் குடும்பச் செலவையும் மற்றபடி வந்து போகும் விருந்தினர்கள், தூதுவர்கள் முதலியவர்களுக்கு ஏற்படும் செலவுக்காக பைத்துல்மால் என்னும் பொது நிதியில் சேர்க்கப்பட்டது.
இதுவரை இஸ்லாத்திற்கு முக்கியமான இரண்டு விரோதிகள் இருந்தார்கள்.
(1) சிலை வணக்கக்காரர்கள்
(2) யூதர்கள்.
கிறிஸ்தவர்கள் அரேபியாவில் இருந்த போதிலும் அவர்கள் போதிய பலமும், செல்வாக்கும் உடையவர்களாயில்லை. கைபர் வெற்றி கொள்ளப் பட்டதிலிருந்து யூதர்களின் பலம் மிகக் குன்றிவிட்டது. அதன்பின் சத்திய இஸ்லாத்திற்கு விரோதமாகச் சிலை வணக்கம் செய்பவர்கள் மட்டும் இருந்தனர். இதுவரை விரோதிகள் அதிகம் இருந்தபடியால் மதசம்மந்தப் பட்ட கல்வியைப் போதிப்பதற்குச் சம்மந்தமில்லாது போயிற்று. கைபர் ஜெயிக்கப்பட்ட பின் யூதர்களின் தொல்லை குறைந்து விட்டதால் மார்க்கப் போதனை செய்வதற்குச் சம்மந்தம் கிடைத்து விட்டது. இதனால் முஸ்லிம்கள், மார்க்கச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியதாயிற்று. உணவிற்கு நகமுள்ள பறவைகளும், மாமிச உணவு உண்ணும் மிருகங்களும், கோவேறு கழுதைகளும் விலக்கப்பட்டன.
கைபரிலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாதிஉல் குரா என்னும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். அங்குச் சில யூதர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சண்டை செய்யும் நோக்கத்துடன் அங்குப் போகவில்லை. ஆனால் அங்குச் சென்றதும் யூதர்கள் முன்னமே தயாராயிருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்புகளை எய்ய ஆரம்பித்தார்கள். இதிலிருந்து சண்டை ஆரம்பமானது. ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் யூதர்கள் பணிந்து விட்டார்கள். கைபர் யூதர்களுடன் செய்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை இவர்களும் ஒப்புக் கொண்டார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும், மறு ஆண்டு மக்காவில் மூன்று நாள் தாமதித்து ஹஜ்ஜு - உம்ராச் செய்து கொண்டு போகலாம் என்று கண்டிருந்தது. அதன்படி ஹஜ்ஜை இவ்வருடம் நிறைவேற்ற விரும்பினார்கள். அதற்காக ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றிருந்தவர்களில் இறந்து போனவர்களைத் தவிர மற்ற எல்லோரும் அவசியம் வர வேண்டுமென விளம்பரப் படுத்தினார்கள். அதன் பிரகாரம் எல்லோரும் அருமை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றார்கள். உடன்படிக்கையில் முஸ்லிம்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கும் போது ஆயுதங்களைக் கொண்டு வரக்கூடாதென்று கண்டிருந்ததால் ஆயுதங்களையெல்லாம் மக்காவிலிருந்து எட்டு மைல் தூரத்திலுள்ள பாஹஜ் என்னுமிடத்தில் வைத்துச் சென்றார்கள். 200 பேர் அவைகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். மற்றவர்கள் மக்கா போய்ச் சேர்ந்தார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லப்பைக் என்று சப்தமிட்டுக் கொண்டு கஃபாவை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் மற்ற முஸ்லிம்களும் சென்று தங்களின் விருப்பப்படிக் கிரியைகளை சுதந்திரமாக நடத்திக் கொண்டார்கள்.முஸ்லிம்கள் மக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு குறைஷிகள் இடங்கொடுத்து விட்டார்கள். ஆனால் முஸ்லிம்கள் மக்காவிற்குள் பிரவேசிக்கும் காட்சியைக் காணச் சகிக்காதவர்களாய்க் குறைஷிப் பிரபுக்கள் எல்லோரும் நகரத்தை விட்டு வெளியேறிச் சென்று சுற்றுப் பக்கங்களில் இருந்து கொண்டார்கள். குறைஷிகள் மூன்று தினங்களுக்குப் பின் அலி (ரலி) அவர்களிடம் வந்து, நிபந்தனைப்படி மூன்று நாட்களாகி விட்டதால் நீங்கள் மக்காவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படியே முஸ்லிம்கள் எல்லோரும் அங்கிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டு விட்டனர்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொற்பாதங்களைத் தொடர்வோம்...