• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

யாரசூலல்லாஹ்!
எங்களது பாபங்களை மன்னியுங்கள்!

எஸ். காதிமுல் கலீல் யாஸீனிய் ஹக்கிய்யுல் காதிரிய்- திருச்சி.

இஸ்லாத்தின் பூர்வீக வழிதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத். இந்தக் கொள்கைக்கு மாற்றமாக இஸ்லாத்திற்குள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிவரும் பல முஸ்லிம் பெயர் தாங்கிகள் தமது அமைப்புகளின் மூலம் ஏற்படுத்தும் குழப்பங்களால் சிதறுண்டு செய்வதறியாமல் நிற்கிறது நமது சமுதாயம். இவர்கள் தங்களது குழப்பங்களை குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றுகிறோம் எனக் கூறி செய்து வருகின்றனர். இதைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

கடைசிக் காலக் கட்டத்தில் பல தஜ்ஜால்களும், பொய்யர்களும் வருவார்கள். அவர்கள் உங்களிடம் கொண்டு வரும் செய்திகளை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள்.  உங்கள் மூதாதையர்களும் கேட்டிருக்க மாட்டார்கள். உங்களையும் அவர்களுடன் (சேராமலிருக்க) எச்சரிக்கிறேன். உங்களை அவர்கள் வழிகெடுத்து விட வேண்டாம்.  உங்களை அவர்கள் குழப்பத்தில் ஆழ்த்தி விட வேண்டாம் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (நூல் : முஸ்லிம்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய குழப்பமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழப்பவாதிகளையும், குழப்பங்களையும் தவிர்த்து வாழ வேண்டும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதைப் போன்று நமது மூதாதையர்கள் கேள்விப்படாத செய்திகளை இன்றைய குழப்பவாதிகள் கூறுகின்றனர். இஸ்லாமியர்களின் அடையாளச் சின்னமான தொப்பியை அணிவது நபி வழியல்லவென்றும், தராவீஹ் தொழுகையில் 12 ரக்அத்தைக் குறைத்து 8 ரக்அத் என்றும், பூமான் நபியைப் புகழ்வது ஷிர்க், குப்ர் என்றும், மண்ணறைகளைத் தரிசிப்பது ஷிர்க் (வணக்க வழிபாடு) என்றும் கூறி மக்களை மாக்களாக்க முயன்று  கொண்டிருக்கின்றனர். மவ்லித் ஓதுவதைத் தடுக்கும் எண்ணத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டு இறுதியாக மவ்லித் ஓதக் கூடாது என்று நேரடியாகச் சொன்னால் மக்களுக்கு மத்தியில் எடுபடாது என்பதனை அறிந்து மவ்லிதில் குறைகள் இருக்கின்றன; இன்னும் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துகள் இருக்கின்றன.  எனவே மவ்லித் ஓதக் கூடாது. ஓதினால் ஷிர்க், குப்ர் என்று கூறித் திரிகின்றனர்.  இன்னும் வஹ்ஹாபிகள் பெரிதாக எடுத்துக் கூறி (வாதாடும், குறை கூறும்) மவ்லித் வரிகள் இதோ...


பொருள்: நபியே! நாயகமே! நீங்களே அழித்தொழிக்கும் பாவங்களையும், குற்றங்களையும் மன்னிப்பவர்கள்.

இந்தப் பாடலை வைத்து “குற்றங்களை மன்னிக்கும் அதிகாரம் பெற்றவன் அல்லாஹ் மட்டுமே” (அல்குர்ஆன் 3:135) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பது வேறு யார்? என்று அல்லாஹ் கூறியிருக்க, அல்லஹ்வுடைய இடத்திலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை வைத்து நீங்கள் பாவங்களை மன்னிக்கக் கூடியவர்கள் என்று கூறினால் இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன? என்று வஹ்ஹாபிகள் கேட்கிறார்கள். இன்னும் “கஃப்பார்” என்றால்  அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தம். மனிதனுக்கோ, நபிக்கோ கூறுவது ஷிர்க் என்கிறார்கள். சுருக்கமாக இவர்களின் வாதம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது என்பது தான். ஆனால் அல்லாஹ் தன் அடியார்களையும் மன்னிக்கும்படி பல ஆயத்து (வசனங்)களில் கூறியுள்ளான்.

தனது அடியார்களை மன்னிக்கும்படி இறைவன் கூறிய வசனங்கள்:

1. நீங்கள் மன்னித்து விடுங்கள்  (அல்குர்ஆன் 2 : 109)

2. தர்மத்தை விட இன்சொல்லும், மன்னிப்பும் மிக மேலானதாகும். (அல்குர்ஆன் 2 : 263)

3. அவர்கள் (நல்லடியார்கள்) மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பார்கள். (அல்குர்ஆன் 3 : 134)

4. மன்னித்து விடவும் (மற்றவரின் குற்றங்களை மன்னித்து விடுங்கள்) உங்களது குற்றங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா? (அல்குர்ஆன் 24 : 22)

5. ஈமான் கொண்டவர்கள் கோபமூட்டப்பட்ட சமயத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். (அல்குர்ஆன் 42 : 37)

6. எவரேனும் (பிறர் செய்த தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் இது வீரமிக்க செயலாகும். (அல்குர்ஆன் 42 : 43)

7. ஈமான் கொண்டவர்களே! குற்றங்களை நீங்கள் சகித்து, புறக்கணித்து மன்னித்தும் விட்டால் அல்லாஹ்வும் உங்களை மன்னிப்பான். (அல்குர்ஆன் 64 : 14)


அல்லாஹ்வின் அடியார்களை மன்னிக்கும்படி பெருமானாரின் கட்டளைகள்.

1. யார் மன்னிக்கவில்லையோ, அவர் மன்னிக்கப்பட மாட்டார்.


 (நூல் அஹ்மத் 4:365)

வெட்டி வாழ்பவர்களுடன் ஒட்டி வாழுங்கள். அநீதம் இழைத்தவரை மன்னித்து விடுங்கள்.

(நூல் : அஹ்மத் : 17452)  

இவ்வாறு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். மன்னிப்பு என்னும் தன்மை அல்லாஹ்விற்கு மட்டுமே இருந்தால், மேற்கூறப்பட்ட வசனங்களிலும், ஹதீஸுகளிலும் தனது அடியார்களை அல்லாஹ்வும் ரஸூலும் மன்னிக்கும்படிக் கட்டளை ஏன் பிறப்பித்திருப்பார்கள்? எனவே மன்னிக்கும் தகுதியை சாதாரண மனிதர்களுக்குத் தரும் இறைவன் தன்னுடைய ஹபீபான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்குத் தராமலா இருப்பான்? அல்லாஹ்வுடைய மன்னிப்பிற்கும், அடியார்களின் மன்னிப்பிற்கும் வித்தியாசமிருக்கிறது. நாம் அவனைப் போல், அவனது தூதரைப் போல் மன்னிக்கின்றோம் என்ற கருத்தல்ல.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மன்னிக்கும் தன்மையை மூன்று விதமாக அருளியுள்ளான்:

1. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவறு செய்தவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருதல் (சிபாரிசு செய்தல்)

2. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவது.

3. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே பாவ மன்னிப்புத் தேடுதல் போன்ற மூன்று முறையிலும் பாவ மன்னிப்புத் தேடலாம்.


முதல் முறைக்கு ஆதாரம்:

மனிதன் பாவம் செய்திருந்தால் நபியவர்களிடம் சென்று அவன் பாவத்திற்காக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டு இறைவனிடமிருந்து பாவ மன்னிப்புப் பெற்றுத் தருமாறு சிபாரிசு கோர வேண்டும் எனக் கட்டளையிடும் திருவசனம்...

மக்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்திட்ட போது (அதற்காக வருந்தி) நபியே! உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்புக் (சிபாரிசு) கோரினால் (அப்போது) அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுள்ளவனாகவும் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். (குர்ஆன் 4 : 64)


மேற்கூறிய வசனத்தின்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாவ மன்னிப்பிற்கான சிபாரிசு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாகிறது. அதே போன்று உத்பீ (ரலி) கூறுகிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பின் ஒரு கிராமவாசி நபியவர்களின் ரவ்ளாவிற்கு வந்து அஸ்ஸலாமு அலைக்கும் யாரசூலல்லாஹ் என்று கூறி (4:64) மேற்கூறிய வசனத்தை ஓதி எனவே நான் எனது பாவங்களை மன்னிக்க வேண்டியவனாகவும் அதற்காக தங்களை பரிந்துரை செய்ய வேண்டியவனாகவும் வந்திருக்கிறேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும் எனக் கூறி பின்வரும் கவிதைகளைப் பாடினார். 

    (தொடரும்)