சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் இரவு நேரத்தை மூன்று பங்காகப் பிரித்துக் கொள்வார்கள். அவற்றில் ஒரு பங்கு உறங்குவதற்கும் - ஒரு பங்கு கிதாபுகளை (நூற்களை) கோவை செய்வதற்கும் - ஒரு பங்கு தொழுவதற்கும் எனப் பிரித்துக் கொண்டு அவற்றை அனுதினமும் தொடர்படியாகக் கடைப்பிடித்து வந்தார்கள்!
மாதம் ஒன்றுக்கு 3 முறை திருக்குர்ஆனை ஓதி (தமாம்) முடித்து விடுவார்கள்! ஒவ்வொரு ரமளானிலும் 60 முறை திருக்குர்ஆன் ஷரீஃபை ஓதி (தமாம்) முடித்து விடுவார்கள்! இவையல்லாமல் சில குறிப்பிட்ட சூராக்களை (அத்தியாயங்களை) அழகுற அடிக்கடி ஓதுவார்கள்.
மேலும் ரபீஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு கட்டத்தில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுடன் ஃபிஸ்தாது என்னும் ஊரிலிருந்து இஸ்கன்தரிய்யா என்னும் ஊருக்குச் சென்றிருந்தேன். அவ்வூர் சென்றடைந்ததும் ஓர் (ஆதத்தை) வழமையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதாவது, ஐந்து வேளைகளிலும் ஜாமிஆ பள்ளியில் இமாம் ஜமாஅத்துடன் தொழுதார்கள். விடுதியில் தங்கியிருக்கும்போது கடலைப் பார்த்துக் கொண்டு பகலிலும் இரவிலும் திருக்குர்ஆன் ஷரீஃபை ஓதிக் கொண்டிருந்தார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் திருக்குர்ஆனை நிறைவான சப்தத்துடன் அழகாக ஓதுவார்கள். கேட்க கேட்க இனிமையாக இருக்கும்!
இமாமவர்கள் ஒரு ஹதீஸைக் குறித்து (வஃளு) உபதேசம் செய்யத் தொடங்கினால் அந்த ஹதீஸ் தெடர்பான திருமறை வசனங்களை ஓதிக் கொள்வார்கள்! இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் அந்திம காலத்தில் நோயினால் சோதிக்கப்பட்டார்கள்! இமாம் அவர்களுக்கு மூலநோய் உண்டாகி, தங்களின் பித்தட்டில் செம்பை வைத்துக் கொள்வார்கள். அதில் இரத்தம் நிறைந்து விடும்! கடுமையான அவ்வேதனையைப் பொருட்படுத்தாமல் ஓதிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பார்கள்.
இவ்வளவு சிரமமான வேளையில் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களுக்கு ஹள்ரத் இத்ரீஸ் அல் கவ்ளானி (ரஹ்) அவர்கள் நபர் ஒருவர் மூலம், அபூ அப்துல்லாஹ்வே (இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களே) தங்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூரமான வேதனை குறித்து தங்களுக்கு ஆபியத்தை (குணத்தை)த் தந்திட வேண்டும் என அல்லாஹ்விடம் துஆ பிரார்த்திக்கக் கூடாதா எனக் கேட்டிருந்தார்கள்!
அதற்கு முஹம்மது இப்னு இத்ரீஸ் என்றழைக்கப்பட்ட இமாமவர்கள், இந்த இத்ரீஸை விட அந்த இத்ரீஸ் அல்லாஹ்விடம் மிக நெருக்கமானவர்கள் எனக் கருதுகிறேன்! அந்த இத்ரீஸின் துஆவை ஃபகீரான இந்த இத்ரீஸ் நாடுகிறேன் எனப் பணிவாகப் பதில் எழுதி அனுப்பினார்கள்!
(இமாமின் மகாமை இன்னும் அவதானிப்போம்.... இன்ஷா அல்லாஹ்)