• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

திருமறைப் பக்கம்


சுமை வேண்டாம்

குர்ஆன் ­ஷரீபில் பல துஆக்கள் இடம் பெற்றிருக்கின்றன. மனித குலத்துக்கு ஏற்படும் இன்னல்கள்- இடைஞ்சல்கள்- சோதனைகள் துன்பங்களையெல்லாம் நபிமார்களுக்குக் கொடுத்து அந்த நேரங்களில் அவர்களின் திருவாயினால் கேட்ட பிரார்த்தனைகளைப் பதிவு செய்து, அதே துஆக்களை நாம் கேட்கும்போது அதற்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட பாபமன்னிப்புப் பிரார்த்தனையும் - இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட “எங்களை முஸ்லிமாக வாழச் செய் என்ற துஆவும், நோயின் போது அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆவும். குழந்தை வரம் கேட்டு ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட வேண்டுதலும், மூஸா அலைஹிஸ்ஸலாம் - தாவூது அலைஹிஸ்ஸலாம் - சுலைமான் அலைஹிஸ்ஸலாம் - ஈஸா அலைஹிஸ்ஸலாம் இவர்களெல்லாம் தங்கள் வாழ்வின் முக்கியமான கால கட்டங்களில் கேட்ட துஆக்கள் மனித சமுதாயத்திற்கோர் அருள் வேட்டலாக மலர்ந்திருக்கின்றன!

நாம் அடிக்கடி ஓத - ஓதக்கேட்கும் துஆ ஆயத் மேலே இடம்பெற்றிருக்கிறது! தாஜ்மஹாலில் மும்தாஜின் கப்ருக்குப்பின் உள்ள சுவற்றில்கூட மன்னர் ஷாஜஹான் இந்த துஆவை அலங்காரமாகப் பொறித்துள்ளார்!

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென பொன்மொழி கூறுவதுண்டு! ஆனால் ஓரளவுக்கு மேல் மனிதனுக்குத் தாங்கும் சக்தி கிடையாது!

நீ எவ்வளவு சுமை வேண்டுமானாலும் ஏற்று! ஆனால் அதனைச்சுமக்கும் சக்தியை மட்டும் கொடு! என்று கேட்பது பொருத்தமாக இருக்காது! மாறாக, இறைவா! ஏதோ ஓரளவு தாங்கும் ஆற்றலைத் தந்திருக்கிறாய்! அதனால் தாங்க முடியாத - சுமக்க முடியாத - பெருஞ்சுமையை சுமக்கச் செய்து விடாதே ! எனக் கேட்பதே பலவீனமான மனிதனுக்குப் பொருந்தும்.

ஒரு மனிதன் எட்டு மணி நேரம் - பத்து மணி நேரம் வேலை செய்யலாம். அவனை தினமும் 18 மணி நேரம் வேலை வாங்கினால் அவனால் சுமக்க முடியாது. ஓர் அரசாங்கம் ஓரளவு விலைவாசியை உயர்த்தலாம். அதுவே வரைமுறையைக் கடக்கும்போது குடும்பங்கள் அந்தச் சுமையைத் தாங்க முடியாது! 10 டன் ஏற்ற வேண்டிய லாரியில் 15 டன் ஏற்றினால் வண்டி நகராது!

மனிதர்களின் அநீதியான செயல்களால் இறைவன் கோபம் கொண்டுவிட்டால் அவர்களால் தாங்க முடியாத சுமைகளை ஏற்றி நசுக்குகிறான்...

அதனால்தான் அவன் நம்மைக் கேட்கத் தூண்டுகிறான்.

இறை வா! எங்களால் தாங்க முடியாத  சுமைகளைச் சுமத்திவிடாதே  என! அல்லாஹ் நம் அனைவரையும் அவனது சோதனை வளையத்திலிருந்து காத்து ரட்சிப்பானாக! ஆமீன்.