Pezhai » 2014 » Oct2014 » ஞானத்துளிகள்
ஞானதுளிகள்
தொகுத்தவர்: -
திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை
துறவி ஒருவன் உலக ஆசைக்குத் தன் உள்ளத்தில் இடங்கொடுக்கலாகாது. அப்படி இடங்கொடுப்பானாகில் தான் துப்பிய எச்சிலைத் திரும்பவும் எடுத்து உண்பதற்கு அது நிகராகும்.
சந்நியாசி ஒருவனுடைய தூய வாழ்க்கையைப் பார்த்து இல்வாழ்பவர்கள் சிறிது சிறிதாகப் பற்றற்ற வாழ்வில் பிரவேசிக்கின்றனர். சந்நியாசி ஒருவனுடய நெறியான வாழ்க்கை அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாய்க்காவிட்டால் உலகப் பற்றுதல்களில் அவர்கள் இன்னும் அதிகமாக மூழ்கிப் போவார்கள்.
சந்நியாசி ஒருவன் உலக சம்பத்துக்களையெல்லாம் முற்றும் துறந்தவனாக இருக்க வேண்டும். அவன் முற்றும் துறந்தவனாக இருக்கும் பொழுதுதான் தனக்கும் நலம் தேடிக் கொள்கிறான். முற்றும் துறந்த துறவி ஒருவனைப் பார்க்கின்றவர்களுக்குத் தாங்களும் சிறிதளவாவது உலகப்பற்றை ஒழித்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் வருகிறது.
ஆத்ம சாதனம் பயிலுகிறவர்கள் ஆண்பாலர், பெண்பாலர்களோடாவது, பெண்பாலர் ஆண்பாலர்களோடாவது தொடர்பு வைத்துக் கொள்ளலாகாது. அவர்கள் தூய வாழ்வு வாழ்கின்றவர்களாக இருந்தாலும் ஒரு பாலர் மற்றெரு பாலரோடு எவ்வித இணக்கமும் வைத்துக் கெள்ள லாகாது. இந்தக் கண்டிப்பான விதி துறவியர்களுக் குரியது. ஆனால் ஞானிகள் இவ்விதியை அவ்வளவு கண்டிப்பாக அனுஷ்டிக்க வேண்டியதில்லை.
துறவி ஒருவன் பெண்பால் ஒருத்தியினுடைய படத்தையும் கூட கண்ணெடுத்துப் பார்க்கலாகாது. துறவி ஒருவன் காமத்தை முற்றிலும் வென்றவனாயிருந்தாலும் இவ்விஷயத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டித் தருதல் பொருட்டு மிகக் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆத்ம சாதகன் ஒருவன் முதலில் பஹூதகக் ஆகிறான். அதாவது வெவ்வேறு ஊர்களையெல்லாம் பார்த்து ஆங்காங்கிருக்கிற நீர்நிலையெல்லாம் அருந்துபவன் என்பது அதன் பொருள். பிறகு ஏதேனும் ஓரிடத்தில் அவன் ஸ்திரமாகத் தங்கியிருக்கின்றான். அப்பொழுது அவன் குடீசகன் எனப்படுகிறான்.
பஹூதகர்கள் என்றும் குடீசகர்கள் என்றும் இரண்டுவித யோகியர்கள் இருக்கிறார்கள். புதிய புதிய ஸ்தலங்களுக்கு ஓயாது போய்க் கொண்டிருக்கிறவர்கள் பஹூதகர்கள். அப்படி ஸ்தலங்களையெல்லாம் போய்ப் பார்த்த பிறகும் அவர்களுக்குச் சரியாக ஆத்ம சாந்தி வாய்க்காதிருக்கலாம். குடீசகர்கள் ஸ்தல யாத்திரை செய்தான பிறகு மன விச்ராந்தியடைந்து பேரானந்தத்தில் திளைப்பவர்களாக ஏதேனும் ஓரிடத்தில் தங்கியிருக்கின்றனர். தீர்த்த யாத்திரை செய்ய வேண்டிய அவசியம் பிறகு அவர்களுக்கு ஏற்படுவதில்லை.
சொக்கட்டான் ஆடுகிறவர்களுக்குத் தாங்கள் செய்கிற தவறுகள் விளங்குவதில்லை. ஆனால் அவர்கள் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்குப் பல தடவைகளில் தவறுகள் நன்கு விளங்குகின்றன. உலக வாழ்க்கையில் கட்டுண்டிருக்கிறவர்களுக்குத் தாங்கள் செய்கிற தவறுகள் விளங்குவதில்லை. உலக வாழ்க்கையை நீத்த துறவியர்களுக்கு அக்குறைகள் நன்கு விளங்குகின்றன. சாதுக்களில் மூன்று தரத்தார் உளர். சாத்துவிக இயல்புடையவர்கள் தானாகக் கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடைகின்றனர். இவர்கள் தலைத்தரமானவர்கள். இடைத்தரமான சாதுக்கள் குடும்பஸ்தர் வீட்டுக் கதவைத் தட்டி பிச்சை என்கின்றனர். கிடைத்ததை வாங்கிக் கொண்டு போகின்றனர். ஆனால் கடைத்தரமானவர்களோ யாசகத்தின் பொருட்டு முரட்டுத் தனமாகச் சண்டை போடுவார்கள்.
சாது ஒருவன் எல்லார் உள்ளத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்று உணர்ந்து உயிர்களுக்குத் தொண்டு புரிகிறான்.
பறவைகளும் துறவிகளும் நாளைக்கென்று எதையும் தேடி வைப்பதில்லை. ஆனால் குடும்பஸ்தர்கள் பொருள் சேகரித்து வைத்தாக வேண்டும்.
ஸோஹம் - பரம்பொருள் நான், என்று சந்நியாசிகள் இயம்புகின்றனர். அதற்கேற்றபடி அப்பெருநிலையில் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் இம்முறையை இல்வாழ்பவர்கள் அனுஷ்டிக்கலாகாது. ஏனென்றால் செயலுக்குத் தங்களைக் கர்த்தாக்களாக அவர்கள் உணருகிறார்கள். யாரை சாது என்று கருதுவது? யார் ஒருவன் தனது உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் இறைவனுக்கு ஒப்படைத்திருக்கின்றானோ அவன் சாது. காமத்துக்கும் காசு ஆசைக்கும் அவன் தன் உள்ளத்தில் இடம் கொடுப்பதில்லை. பெண்பாலரை அவன் தாய் சொரூபமாகக் கருதிப் போற்றுகிறான். உலக விஷயஙக்ளைப் பற்றி அவன் பேசுவதில்லை. இறை விஷயத்தைப் பற்றியே அவன் பேசுகிறான்.
ஒருவன் அனுபவிக்க வேண்டிய உலக ஆசைகள் சில இருக்கின்றன. அவைகளை அனுபவித்து அவைகளில் நிலைத்த நன்மை ஒன்றுமில்லை என்று அறிந்து கொள்ளும் வரையில் அவன் பொறுத்து இருக்க வேண்டும். ஆனால் சந்நியாசி ஒருவனுடைய நிலைமை இதினின்று முற்றிலும் வேறானது. பரம்பொருளிடத்திருந்து வருகிற பேரானந்தத்தைத் தவிர வேறு எதையும் அவன் நாடுவதில்லை.
நித்திய சித்தர்கள் லெளகிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. பிறந்தது முதற் கொண்டு அவர்கள் உலக ஆசைகளையெல்லாம் தாண்டிய நிலையில் இருக்கின்றனர்.
சுரைக்காய், பீர்க்கங்காய் முதலியன முதலில் பிஞ்சுவிடுகின்றன. பிறகு அப்பிஞ்சில் பூ தென்படுகிறது. அங்ஙனம் நித்திய சித்தர்கள் முதலில் பரம்பாருளை தரிசிக்கின்றனர். பிறகு சாதனங்கள் புரிகின்றனர்.