• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

மனிதனின் விலை!

ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட அந்த மன்னர் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரே தனது சீடர்களுடன் மதகுரு ஒருவர் வந்தார்.  மன்னரைப் பார்த்துவிட்ட அந்த மதகுரு மன்னருக்கு வழிவிடும் வகையில் சற்று ஒதுங்கினார்.

இதைக் கவனித்த மன்னர் ரதத்தில் இருந்து கீழே இறங்கி, அந்த குருவின் காலில் பணிந்து விழுந்து வணங்கினார். அருகில் நின்று கெண்டருந்த மந்திரிக்கு மன்னரின் இந்தச் செயல் வியப்பாக இருந்தது. ஒரு சாதாரண சாமியார் காலில் மன்னர் விழுந்து வணங்குகிறாரே...என்று பொருமினார். அதை மன்னரிடமே கேட்டுவிடுவது என்று முடிவெடுத்து அவரிடமே கேட்டுவிட்டார்.


மன்னர் பதில் எதுவும் கூறாமல் அந்த மந்திரியிடம் ஒரு பெரிய மீனும், ஒரு கலைமானின் தலையும், ஒரு மனிதத் தலையும் உடனே கொண்டு வர கட்டளையிட்டார்.

நமது கேள்விக்கு பதில் சொல்லாமல் இவற்றை எடுத்து வரச் சொல்கிறாரே... என்று யோசித்த மந்திரி, மன்னரின் கட்டளையை மீற முடியாது என்பதால் அவற்றை எல்லாம் இரண்டு நாள் கழித்து எடுத்து வந்து கொடுத்தார். இவற்றை எடுத்து வர ஏன் தாமதம் என்று மன்னர் கேட்டார். அதற்கு மந்திரி, மன்னா மீன் உடனே கிடைத்துவிட்டது. தளபதியிடம் சொல்லி மானின் தலையும் கிடைத்து விட்டது. மனிதத் தலைதான் சுடுகாட்டில் இருந்து எடுத்து வர தாமதம் ஆகிவிட்டது. என்றார்.

அடுத்ததாக, அந்த மூன்றையும் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்றுவிட்டு வருமாறு கூறினார் மன்னர். மந்திரிக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மன்னரின் உத்தரவை நிறைவேற்ற மூன்றையும் சந்தைக்கு எடுத்துச் சென்றார். மீன் எதிர்பார்த்ததைவிட நல்ல விலைக்குப் போயிற்று. மானின் தலையும் பாடம் செய்து வீட்டில் அலங்காரமாக வைக்க ஒருவர் வாங்கிச் சென்றார். ஆனல் மனிதத் தலையை மட்டும் யாரும் வாங்கவில்லை. அதை பார்த்த மாத்திரத்தில் பயந்து ஓடிவிட்டனர் பலர்.


மன்னரிடம் வந்து யாரும் மனிதத் தலையை வாங்கவில்லை என்று கூறினார் மந்திரி. மன்னரோ இலவசமாகக் கொடுத்து விட்டு வருமாறு கட்டளையிட்டார். மந்திரி சந்தைக்கு மீண்டும் சென்று இலவசமாக கொடுப்பதாகச் சொல்லியும் யாரும் வாங்கவில்லை. நொந்து போன மந்திரி மறுபடியும் மன்னரைப் பார்க்க வந்தார். அப்போது மன்னர் சொன்னார்...

அமைச்சரே! உயிர் இருக்கும் வரை தான் இந்த உடம்புக்கு மதிப்பு, செத்த பின்பு மீனுக்கும் விலை உண்டு, மானுக்கும் விலை உண்டு. ஆனால் ஆறறிவு கொண்ட மனிதன் செத்த பிறகு மதிப்பு இல்லை. இந்த உடம்பு உயிருடன் இருக்கும் போது தலைக்கனத்துடன், அகங்காரத்துடன் என்ன ஆட்டம் போடுகிறது? ஆனால்  ஞானிகள் உயிருடன் இருக்கும் போது கூட, தம்மிடம் எதுவுமே இல்லை, எதுவும் தம்முடையது அல்ல என்பதை உணர்ந்து பரிபூரணத்தை விளங்கி தெளிந்து அமைதியாக இயற்கையோடு அனுசரித்து வாழ்கிறார்கள்.

அதனால் இத்தகைய ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்கிறது? சொல்லப்போனால் ஞானம் அடைய முதல் வழி பணிவது தான் என்றார் மன்னர். இதைக் கேட்ட மந்திரிக்கும் பக்குவம் வந்தது.