• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

மகிழ்ச்சியின் காரணமே! காரணரே!


கலீபா - ஆலிம் புலவர்.

 

நம் வாழ்வில் யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறோமா?

மற்றவர்கள் மகிழ்ச்சிக்கு நாம் காரணமானதுண்டா?

சிந்தித்தால் அது மிகவும் குறுகிப்போய் சிறிய அளவே தட்டுப்படுவது நம்மனதுக்கே புலப்பட்டு விடும்!

நம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாயிருக்கலாம்.

அதைவிட்டு வெளியே வந்தால் நமது நண்பர்கள், உறவினர்களின் மகிழ்ச்சிக்கு எப்போதாவது காரணமாயிருக்கலாம்.

ஆனால் அதையும் தாண்டி - ஊர் மக்களுக்கு - உலக மக்களுக்கு - நம் சமுதாய மக்களுக்கு - அவர்கள் மகிழ நாம் பாடுபட்டோமா? என்றால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோரின் கேள்வியின் விடை பூஜியமாகத்தான் இருக்கும்.

ஆனால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வாழ்வை சிந்தித்தால்....

அவர்கள் எத்தனை கோடி மக்களின் - எத்தனை கோடி உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாயிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

அறபு மக்களின் ஆஸ்திகளில் ஒன்றாகிய “மனிதர்களை அடிமைகளாக்கி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை” அறவே இல்லாமல் ஆக்கியவர்கள் அவர்களல்லவா?

பத்து நாள் சிறையிலிருந்துவிட்டு விடுதலையாகி வெளியே வந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்! விடுதலை - சுதந்திரம் - எத்தனை சுகமானதென்று?

அறபகத்தில் வாழ்ந்த அடிமைகளை வாழ்நாள் சிறையிலிருந்து விடுவித்தவர்களல்லவா வேந்தர் பெருமானார் அவர்கள். 

அந்த அடிமைகள் சுதந்திர மனிதர்களான பின் அவர்கள் அனுபவித்த மகிழ்ச்சியை அளவிட்டுக் கூற முடியுமா?

மனிதர்களுக்கு கருப்பு நிறம் என்றால் தனக்குத்தானே தாழ்வு மனப்பான்மை வரும்! கருப்பனே! உன் நிறத்தால் நீ தாழ்ந்தவன்! எனும்போது அந்தத் தீண்டாமையால் மனம் படும்பாட்டை வார்த்தைகளில் வடித்து - தர முடியுமா? இந்தப் பெண் கருப்பு... இந்த மாப்பிள்ளை கருப்பு... என திருமணத் தேர்வில் சம்மந்தப்பட்ட வீட்டார் சொல்லிச்சென்ற வார்த்தைகளைக் கேட்கும் கன்னியரின் மனமும் காளையரின் மனமும் என்ன பாடுபடுகிறது!

பெருமானார் அவர்கள், கருப்பு - வெளுப்பெல்லாம் வெறும் கற்பனை! இனி நிறவேற்றுமை இங்கு விற்பனையாகாது! என, கருப்பு நிற ஹபஷி நீக்ரோக்களை - தோளோடு தோள் சேர்த்து - அணியோடு அணியாக சமமாக நிற்க வைத்தபோது அந்தக் கருப்பர்கள் அனுபவித்த மகிழ்ச்சியை கம்பன் கவிதை கூட வெளிப்படுத்த முடியாதே!

கணவன் இறந்து விட்டான்! என் வாழ்வே முடிந்துவிட்டதே! இனி யார் எனக்கு அடைக்கலம்? என வெதும்பிய விதவைகளுக்கு; பெண்ணே! உனக்கும் ஒரு வாழ்வு- மறுவாழ்வு உண்டு என திருமணத்தின் வாசலைத் திறந்துவிட்டபோது அதனால் பயனடைந்தவர்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேது?

நம் நாட்டில் வாழும் மாற்று சமுதாயப் பெண்கள் கணவன் இறந்த பின்; சுமங்கலி - அமங்கலியாகக் கருதப்பட்டு ஒதுக்கிவைக்கப்படும்போது; முஸ்லிம் பெண்கள் மற்றொரு திருமணத்தின் மூலம் புதுவாழ்வு பெற்று மகிழ்ச்சியடைகிறார்களே இதன் காரணகர்த்தா யார்? மாநபி நாதரல்லவா?

கால்நடைகள் உயிரினங்களும் அவர்களால் மகிழ்ச்சி பெறுகின்றனவே!

முஸ்லிம் நாடுகளில் வாழும் கால்நடை உயிரினங்கள் நிம்மதியாக வாழ்கின்றன!

சீனாவில் வாழும் பாம்பு - பல்லி - நாய் - கரப்பான்பூச்சி - தேள் - தவளை - குரங்கு போன்ற உயிரினங்களைக் கேட்டுப் பாருங்கள்! அவை தம் உயிருக்கு உத்திரவாதமின்றி வாழ்ந்து வருவதை உணர்த்தும்.

குடிகாரர்கள் இல்லாத வீட்டில் வருமானம் தங்குகிறது - சேமிப்பு பெருகுகிறது! அவமானம் வந்து சேர்வதில்லை! மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது! இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் யார்? “மதுவே பாபங்களின் தலை” என உரைத்து குடிக்காத குடிமக்களை உருவாக்கினார்களே அந்த கோமான் நபி நாயகரல்லவா?

எல்லாவற்றையும் விட... சுவனவாசிகளிடம் ஒரு பேட்டி காணவேண்டும்! நீங்கள் இப்போது அனுபவிக்கும் சுகபோக வாழ்வுக்கு சூட்சுமம் யாரென்று!

இப்படி, வாழ்வின் வெவ்வேறு தளத்திலிருக்கும் அனைவருக்கும், அவர்களின் துன்பம் நீக்கி - மகிழ்ச்சியை வரவு வைத்தவர்கள் மாண்பு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லவா?

துன்பத்தின் வாசல்களை இறுக அடைத்து, இம்மை - மறுமை - இருவாழ்வின் மகிழ்ச்சிக்கான மந்திரச் சாவிகளை மாநபிகளார் எம்மிடம் ஒப்படைத்துவிட்டார்கள்!  அதனைப்பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்வோரைப் பார்த்து அண்ணலாரும் மகிழ்வார்கள். அல்லாஹ்வும் மகிழ்வான்!