Pezhai » 2014 » Oct2014 » உமர் (ரலி) புராணம்
உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
அகழ்யுத்தம்
(கலிவிருத்தம்)
அவ்வகழ்ப் போரு மகத்தை யகழ்ந்தது
எவ்வகை யுள்ளினும் மியைந்தில துபாயம்
செவ்வை நபிகளார் சிந்தை கலங்கினர்
இவ்வகை யின்னலு மென்று முறுத்திலை.
கொண்டுகூட்டு:
அவ்வகழ்ப் போர் நபிகள் நாயகம் அவர்களின் அகத்தை அகழ்ந்தது. எவ்வகை உள்ளினும் உபாயம் இயைந்திலது. செவ்வை நபிகளார் சிந்தை கலங்கினர். இவ்வகை இன்னலும் என்றும் உறுத்திலது.
பொருள்:
அவ்வகழ்ப் போர் நபிகள் நாயகம் அவர்களின் உள்ளத்தை அகழ்ந்தது. எல்லா வகைகளிலும் சிந்தித்துப் பார்த்தும் தோற்பித்தற்கான உபாயம் அவர்களுக்குப் பொருந்திலது. பரிசுத்த நபிகளார் சிந்தை கலங்கினர். அவர்களை இவ்வகைத் துன்பம் என்றுமே இவ்வாறு உறுத்திலது. (உள்ளத்தைத் தாக்க வில்லை).
குறிப்பு:
அகம் : உள்ளம். அகழுதல் : தோண்டல். உள்ளுதல் : எண்ணுதல். இயைதல் : பொருந்துதல். உபாயம் : சூழ்ச்சி, தந்திரம். செவ்வை : பரிசுத்தம். உறுத்தல் : தாக்கல்.