நாடும் - நாமும்
65 கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரி விதித்தால் 9 கோடி மக்களின் வறுமையைப் போக்கலாம்!
நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரியாக 1.5 சதவீதம் விதிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 9 கோடி ஏழைகளின் வறுமையைப்போக்கிவிட முடியும். இதன்மூலம் ஏழை பணக்காரர்கள் இடைவெளியைக் குறைக்க முடியும் என ஆக்ஸ்ஃபாம் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. (திஇந்து)
இதைத்தானே அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே ஜக்காத் எனும் ஏழை வரியின் மூலம் அருமையான திட்டமாக அறிவித்து விட்டார்களே! உலக அறிஞர்களின் அறிவு இஸ்லாத்திற்கு 1400 ஆண்டுகாலம் பிந்தியதாக இருக்கிறது என உலகம் புரிந்து கொண்டால் சரி!
தேவையும் திங்களும் இருப்பவர்களுக்குத்தான் என்று செல்வதுண்டு. இல்லாமையை தீபாவளியைப்போல இரக்கமில்லாமல் பறைசாற்றவல்லது வேறெதுவுமில்லை.
(தங்க ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர். அக்டோபர் 22.10.2014 தி.இந்து நாளிதழில்)
ஒரு நிமிடம் யோசியுங்கள். இஸ்லாமியப் பெருநாட்களின் விசேஷமே இல்லாதவர்களையும் இருப்பவர்களாக மாற்றுவதுதான். ரமளான் பெருநாளில் ஃபித்ரா எனும் கொடைப்பணம் ஏழைகளின் வீடு தேடிச் சென்று அவர்களை மகிழ்விக்கிறது. பக்ரீத் பண்டிகையில் இறைச்சியே காணாத ஏழை வீடுகளிலும் இறைச்சி எட்டிப்பார்த்து அன்று சாப்பிட்டது போக பல நாட்களுக்கு சேமிப்பாகவும் மாறுகிறது. சுப்ஹானல்லாஹ்!
நாடு எங்கே போகிறது?
தமிழகத்தில் பல ஊர்களில் தீபாவளி மது விருந்துக்காகவே பிரத்யேக ஃபண்டுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறான பண்டுகளின் பெயர்களே கிக் ஏற்றுகின்றன. சமீபத்தில் கண்ணில் பட்டது “மஜா தீபாவளி பண்டுச் சீட்டு.” மாதந்தோறும் பணம் கட்டினால் தீபாவளியன்று மொத்தமாக மது தருகிறார்கள். சம்மந்தப்பட்டவர்களிடம் பேசினால் தீபாவளியன்று கையில் காசு இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக கூலி வேலை செய்பவர்கள் குழந்தைகளுக்குத் துணி மணி பட்டாசு வாங்கவே சிரமப்படுகிறார்கள். அவர்கள் மது குடிக்க எங்கே போவார்கள்? அவர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சேமிப்புச் சீட்டு நடத்துகிறோம் என்கிறார்கள்! எவ்வளவு கொடுமை இது!